உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கும் போன்று இலங்கையில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை இரண்டு கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து சுப்பர் மார்க்கெட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை மக்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
நாளாந்த மனித நுகர்வுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்து விற்பனை செய்து தீர்ந்துள்ளது. வழமையான பொருட்களை கொள்வனவு செய்ய செல்வோரும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இதேபோன்ற நிலைமை காணப்படுகிறது. பல நகரங்கள் மூடப்பட்டமையினால் தமக்கு தேவையான பொருட்களை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தமையினால் அனைத்து சுப்பர் மார்க்கெட்டுகளும் வெறுமையாக காணப்படுகின்றன. அதேபோன்றதொரு நிலைமை இலங்கையிலும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அனைத்து பாடசாலைகளும் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.