உள்ளூர் விமான, ரயில் சேவைகளில் கொரோனா அறிகுறிகளுடன் கனேடியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்த விதிமுறையானது திங்களன்று நண்பகல் முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் அனைத்து கனேடியர்களும் முடிந்தவரை குடியிருப்பிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே செல்லக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விமான சேவை மற்றுல் ரயில் நிறுவனங்களுக்கு மேலதிக விதிமுறைகள் மிக விரைவில் வழங்கப்படும் எனவும், சட்டத்தை அமுல் படுத்துவது நிறுவனங்களின் பொறுப்பு எனவும் பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 5,546 பேர் இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கனடாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி 55 பேர் மரணமடைந்துள்ளனர். 354 பேர் பூரண குணமடைந்து குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.