கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் வணக்கத்தலங்களிடமுள்ள நிதியை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வழங்க வேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று (29) அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில்,
இன்று வணக்கஸ்தலங்களில் நடைபெற வேண்டிய வருடாந்த திருவிழாக்கள், பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகள் அனைத்தும் கொரோனாவின் நிமித்தம் ஸ்தம்பிதமாகியுள்ளன.
யார் யாரை இந்த வைரஸ் அடுத்துத் தாக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. சமயச் சடங்குகளுக்காகப் பாவிக்கவிருந்த நிதியனைத்தும் செலவு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
அதே நேரம் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய குடும்பத் தலைவர்கள்/ தலைவிகள் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
பலருக்கு தத்தமது ஊர்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் அடுத்த வேளை சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கின்றனர். பலர் பட்டினியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு தத்தளித்து வருகின்றனர்.
இந்த காலகட்டத்துக்குத்தான் “மக்கள் சேவை மகேஸ்வரன் சேவை” என்ற முதுமொழி முற்றும் பொருந்துகின்றது. கோயில்களில் திருவிழாக்கள் செய்ய இருந்த உபயகாரர்கள், வணக்கஸ்தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று பட்டினியால் வாடும் பல வறிய குடும்பங்களுக்கு ஓரிரு வாரங்களுக்கேனும் பாவிக்கக்கூடிய உலர் உணவுப் பொதிகளை சமய காரணங்களுக்காக வைத்திருந்த தமது நிதியைப் பாவித்து வாங்கிக் கொடுக்க முன்வர வேண்டும் என்று ஆயிரம் பிறைகண்ட எனது வயதை மட்டுமே எனக்கிருக்குந் தகைமையாக முன்வைத்து அனைத்து அன்புள்ளங்களிடமும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறான ஒரு செயல்பாட்டை சிறப்பாக முன் நடத்த ஊடகங்கள் முன்வரலாம் என்று கருதுகின்றேன். தேவையுடையோரை அவர்கள் அடையாளப்படுத்திக் கொடுக்கலாம்.
தயவு செய்து எமது தமிழ் மக்கள் இந்த கைங்கரியத்திலாவது தங்கள் முரண்பாடுகளை முன்வைக்காது முனைந்து வந்து உதவியளிக்க முன்வரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.