கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பிரித்தானியா ராணியாரின் உரை இன்று ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், அதில் அவர் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க, நாம் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் தற்போது வரை 47,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,934 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த வைரஸின் பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பிரித்தானிய மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில், அரிதிலும் அரிதாக பிரித்தானிய ராணியார் நாட்டு மக்களுக்கு உரையாற்ற முடிவு செய்துள்ளதாகவும், வின்ட்சர் கோட்டையில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள ராணியாரின் உரை இன்று 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றே ராணியார் என்ன எல்லாம் பேசியிருக்கிறார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்போது ராணியாரின் உரை ஒளிபரப்பப்பட்டது. அதில், அவர், இது ஒரு சவாலான நேரம் என்பது எனக்கு தெரியும். இந்த நேர்த்தில் எனக்கு தெரிந்த சில விஷயங்களை நான் உங்களிடம் பேசுகிறேன்.
நம் நாட்டின் இடையூறு விளைவிக்கும் காலம் இது என்றே கூறலாம். அது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்திய ஒரு இடையூறு, பலருக்கு நிதி சிக்கல்கள், மற்றும் நம் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்கள்.
வீட்டிலே தங்கியிருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் இதன் மூலம் பாதிக்கப்பட கூடியவர்களை பாதுகாக்க உதவுகிறது.
நாம் அனைவரும் இந்த நோயை ஒன்றாக கையாளுகிறோம். ஒற்றுமையாகவும், உறுதியுடனும் இருந்தால், இதை நாம் சமாளிப்போம் என்பதை உங்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்.
தற்போதிருக்கும் இந்த சவாலை எப்படி எதிர் கொண்டார்கள், அதற்கு எப்படி பதில் அளித்தார்கள் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க நாம் ஒற்றுமையாகவும், உறுதியுடனும் இருக்க வேண்டும் .
எங்களுக்குப் பின் வருபவர்கள், குறிப்பாக இந்த தலைமுறையின் பிரித்தானியார்கள் எந்தவொரு வலிமையும் உடையவர்கள் என்று கூறுவார்கள்( காரணம்: கொரோனாவை எதிர்கொண்டுள்ளதால்).
எங்கள் அனைவருக்கும் ஆதரவாக வீட்டிற்கு வெளியே தங்கள் அன்றாட கடமைகளை தன்னலமின்றி தொடர்ந்து வரும் என்.எச்.எஸ் ஊழியர்கள், அதே போன்று பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய பாத்திரங்களை மேற்கொள்பவர்களுக்கும் நான் நன்றியை கூற விரும்புகிறேன்
சுய-தனிமைப்படுத்துதல் சில நேரங்களில் கடினமாக இருந்தாலும், எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள், யாராக இருந்தாலும் ஜெபத்திலோ அல்லது தியானத்திலோ இருக்கும் போது, தற்போதைய சூழ்நிலைக்கு இடைவெளிவிட்டு இருக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலர் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்த ஒரு வேதனையான உணர்வை உணர்வார்கள் என்பதை அறிய முடிகிறது.
இதற்கு முன்னர் பல சவால்களை எதிர்கொண்டாலும், இது முற்றிலும் வேறுபட்டது. இந்த நேரத்தில் நாம் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுடனும்(கொரோனாவை விரட்டுவதற்காக) ஒரு பொதுவான முயற்சியில் சேர்கிறோம்.
இதில் வெற்றி பெறுவோம், இந்த வெற்றி நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது.
நாம் இப்போது இன்றளவு வரை சகித்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இருப்பினும் சிறந்த நாட்கள் திரும்பும். அப்போது நாம் நம் நண்பர்களுடன், குடும்பங்களுடன் இருப்போம். மீண்டும் சந்திப்போம் என்று கூறி உரையை முடித்துள்ளார்.