சவுதி அரேபியாவில் காலவரையின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு மன்னர் சல்மான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சவுதியில் கடந்த 4 நாள்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை கால வரையின்றி நீட்டிக்கப்படுவதாக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் தலைநகர் ரியாத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் 24 மணி நேரமும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில், மார்ச் 23 முதல் (மாலை 3 மணி – காலை 6 மணி) ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இதுவரை அங்கு 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,033 நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன. வளைகுடா நாடுகளில் சவுதியில்தான் பாதிப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.