பெருகும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத பரிதாப நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில், ஜப்பானில் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 9,795 என தெரியவந்துள்ளது.
மேலும் டோக்கியோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் உள்ள 712 பேருடன், மொத்தம் ஜப்பானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,507 என கூறப்படுகிறது.
சமீபத்தில் கொரோனாவுக்கு இலக்கான நபர் ஒருவர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 80 மருத்துவமனைகளை நாடியதாகவும், இறுதியில் ஒரே ஒரு மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இன்னொருவர் 40 சுகாதார மையங்களை தொடர்பு கொண்டும், கைவிடப்பட்ட நிலையில் ஒரு மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க தயாரானதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதால், மாரடைப்பு உள்ளிட்ட அவசர வழக்குகளை மருத்துவமனைகள் கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடக்கத்தில் ஜப்பான் முன்னெடுத்த தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகவே கருதப்பட்டது.
ஆனால் ஜப்பான் மருத்துவத்துறையின் மெத்தனத்தால் திடீரென்று மீண்டும் கொரோனா பரவல் கடுமையாக தாக்கியுள்ளது.
மட்டுமின்றி ஜப்பான் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க தவறியதும், அரசாங்கத்தின் திறமையின்மையும் பாதுகாப்பு கருவிகளின் பற்றாக்குறையுமே முதன்மை காரணங்களாக கூறப்படுகிறது.
ஜப்பான் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை, மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை உள்ளிட்டவைகளால் மருத்துவத்துறை தற்போது ஸ்தம்பித்த நிலையில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 931 கொரோனா நோயாளிகள் 5-கும் மேற்பட்ட மருத்துவமனைகளால் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.