கொரோனா வைரஸ் ஆனது அமெரிக்காவில் அதிக மக்களை காவு வாங்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் சில மாகாணங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு ஊரடங்கு வேண்டாம் எனவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, நியூயார்க்கில் பெண் புலி நாடியா, சிங்கத்தை தொடர்ந்து தற்போது பூனைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக அமெரிக்க மக்களின் அனைத்து வீடுகளிலும் நாய்களும், பூனைகளும் ஒரு குடும்ப அங்கத்தினராகவே வளர்ந்து வருகின்றனர். தற்போது நியூயார்க்கின் இரு வேறு இடங்களில் பூனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சுவாசப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இரு பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் வீடுகளில் இருக்கும் மனிதர்களிடமிருந்தோ அல்லது அண்டை வீட்டாரிடம் இருந்து பரவி இருக்கலாமென அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்பதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என தொற்று நோய் நிபுணரும், கொரோனா விவகாரத்தை கவனித்து வரும் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
இனி வீடுகளில் வளர்க்கப்படும் பூனை, நாய்களை வெளி மனிதர்களிடம் பழகுவதையோ, மற்ற பிராணிகளுடன் பழகுவதையையோ சில காலம் கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்றை பரப்புவதில் வளர்ப்பு பிராணிகளுக்கு முக்கிய பங்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எந்த நியாயமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.