கிருமிநாசினி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்தை ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியில் உலக வல்லரசான அமெரிக்கா சிக்கித் தவித்து வருவதுடன் அங்கு இதுவரை 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 52,217 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் ட்ரம்ப் நிர்வாகம் திணறி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து சமீபத்தில் ட்ரம்ப் தெரிவித்த கருத்து விமர்சனத்துக்குள்ளானது.
கொரோனாவைக் குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை விஞ்ஞானிகள் கண்டறிய முயல வேண்டும் என்றும் சூரிய ஒளியில் கரோனா வைரஸ் அழியும் என்றால் மனித உடலில் அதிக ஒளியைச் செலுத்தினால் கொரோனா அழிய வாய்ப்புள்ளதா என்றும் ட்ரம்ப் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் பேச்சு சர்ச்சைக்குள்ளானதுடன் ட்ரம்ப்பின் பேச்சு மிக முட்டாள்தனமானது, ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
‘அப்படியொரு கிருமிநாசினி கண்டிபிடிக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அதைக் குடித்தால், அவர் கரோனாவால் இறப்பதற்கு முன்பே அந்தக் கிருமிநாசினியால் இறந்திருப்பார்’ என்றும் இங்கிலாந்திலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் ஆங்கிலியாவின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹண்டர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ட்ரம்ப்பின் பேச்சை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் இதைக் கூறுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இருப்பினும் வேதிப் பொருட்களைக் குடிக்காதீர்கள்”என்று ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.