யாழ் வடமராட்சியில் பாவனைக்குதவாத பெருந்தொகை ரயர்களை எரித்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மதியம் நடந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சாவகச்சேரியை சேர்ந்த ஐவர் லொறி ரக வாகனத்தில் பாவனைக்குதவாத நூறுக்கும் அதிகமான ரயர்களை ஏற்றிக் கொண்டு வந்து, வடமராட்சி, மண்டான் வீதியில், கரவெட்டி பிரதேசசபையின் கழிவு கொட்டுமிடத்திற்கு அண்மையில் போட்டு எரித்துள்ளனர்.
இதனால் பெரும் கரும்புகை எழுந்து அந்த பகுதியையே புகை சூழ்ந்ததை அடுத்து அயற்குடியிருப்பாளர்கள் பதற்றமடைந்து, கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரனிற்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் சுகாதார பரிசோதகர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, உடனடியாக நெல்லியடி பொலிசாருக்கு விடயத்தை அறிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லியடி பொலிசார் லொறி சாரதி, ரயர்களை சேமித்து வைத்திருந்தவர், அதை எரிக்க அழைத்து வரப்பட்ட 3 இளைஞர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். லொறியையும் நெல்லியடி பொலிசார் கைப்பற்றினர்.
வர்த்தக நோக்கத்திற்காக சேமிக்கப்பட்ட பழைய ரயர்களில் பாவனைக்குதவாதவற்றை எரித்ததாகவும், சுகாதார பரிசோதகர்களின் சோதனைக்கு அஞ்சி அவற்றை எரிக்க முயன்றபோது, சாவகச்சேரி பகுதிக்குள் எரிக்க சுகாதாரப் பிரிவினர் அனுமதிக்கவில்லை என்பதனால் இந்த பகுதியில் யாருக்கும் தெரியாமல் எரிக்க முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், லொறியும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.