அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உலக சுகாதார அமைப்புடன் இருக்கும் உறவை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம், சீனா தான் என்றும், அதை சீனா வைரஸ் என்று கூறியவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.
அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளது, இதற்கு சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பும் வெளிப்படையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதனால் உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வரும் டிரம்ப்,, உலக சுகாதார அமைப்புடனான உறவை, அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பின் அவர் செய்தியாளர்களிடமிருந்து எந்த ஒரு கேள்வியையும் பெறவில்லை. டிரம்பின் இந்த அறிவிப்பு சீனாவை தண்டிக்கும் நோக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், நாங்கள் இன்று உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவை நிறுத்திவிட்டு, அந்த நிதியை மற்ற உலக பொது சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
சீன அரசாங்கத்தின் தவறான செயலின் விளைவாக உலகம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது, சீனாவால் 100,000-க்கும் மேற்பட்ட உயிர்களை அமெரிக்கா இழந்துள்ளது. இது ஒரு உலகளாவிய தொற்றுநோயைத் தூண்டியது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா, வைரஸ் பற்றி உலகத்தை தவறாக வழி நடத்த உலக சுகாதார அமைப்பிற்கு அழுத்தம் கொடுத்தாகவும், இதன் காரணமாக எண்ணற்ற உயிர்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலகெங்கிலும் ஆழ்ந்த பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.