அலாஸ்காவில் கடலோர பகுதியில் சுமார் 5,000 கி.மீ அளவுக்கு மொத்தமாக பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியான இப்பகுதியை ஒரு மாபெரும் சுனாமி தாக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் உள்ளது என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வரவிருக்கும் இயற்கை பேரழிவின் காரணத்தை நீரிணையின் ஒரு பக்க விரிகுடாவில் காணலாம் என்கின்றனர்.
பாரி பனிப்பாறையின் நிலையற்றதாக மாறியுள்ள ஒரு சாய்வுப் பகுதி கடலில் மூழ்கக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது என கூறும் ஆய்வாளர்கள்,
இந்த மாபெரும் பனி பாறையானது ஏற்கனவே நகரத் தொடங்கியுள்ள நிலையில், அது உடைந்து விழுந்தால் பேரலைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சுமார் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு வாய்ப்பிருப்பதாக அந்த விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது பெரும்பாலும் பாரி ஆர்ம் மற்றும் ஹாரிமன் ஃப்ஜோர்டைத் தாக்கும்.
மேலும், நிலச்சரிவால் ஏற்படும் இந்த சுனாமியானது அடுத்த 12 மாதங்களுக்குள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், அநேகமாக அடுத்த 20 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக நடந்தேறும் என்கின்றனர்.
சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய சுனாமி என கருதப்படுவது ஜூலை 9, 1958 அன்று ஏற்பட்டதாகும்.
அந்த நேரத்தில் லிட்டுயா விரிகுடாவில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது, அதில் 90 மில்லியன் டன் அளவுக்கு கற்கள் மற்றும் பனி பாறைகள் அந்த விரிகுடா மீது விழுந்தது மட்டுமின்றி கடல் அலைகள் சுமார் 550 மீற்றர் உயரத்திற்கு எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.