இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையின் கருணாரத்தினவின் இத்தகைய துணிச்சலான கருத்துக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “விக்கிரமபாகு கருணாரத்தின சிங்களவராக இருந்தாலும் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற ஒருவர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெசோ மாநாட்டுக்கு தி.மு.க.வினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த அழைப்பினை ஏற்று, டெசோ மாநாட்டிற்கு சென்னைக்கு வருவதற்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ராஜபக்க்ஷ அரசு அவரைத் தடுக்க நினைத்தது.
ஆனாலும் விக்கிரமபாகு கருணாரத்தின அதனையும் மீறி குறித்த மாநாட்டுக்கு வருகை தந்தார். இவ்வாறு மாநாடு முடிந்து, இலங்கைக்கு சென்றப்போது, அப்போதைய அரசு அவரை தாக்கி, கறுப்புக் கொடி அசைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
இத்தகையவர் தற்போது, சிங்களவர்கள்தான் இலங்கையில் வந்தேறிகள் என்றும் அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு எவருக்கும் அஞ்சாமல் அவர் துணிச்சலாக கருத்து வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குரியது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.