பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அந்த கட்சி உறுப்பினர்களை முதலில் ஆரம்பப்பள்ளிக்கு ஜனாதிபதி அனுப்ப வேண்டும். அரசியல் அநாகரிக செயல்களையே முன்னெடுத்து வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை தேர்தல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமானது என்பதினால் அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்குமாறும் வேண்டுகோள்விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் அனைவரும் இம்முறை எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றால் ஆளும் தரப்பினர் இறுதியில் இனவாதத்தையே கையிலெடுப்பார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முதலில், அவரது தரப்பைச் சேர்ந்த இன்னமும் ஒழுக்க விதிகள் தொடர்பில் தெளிவற்றிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும், அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கு நெருக்கடியை தோற்றுவிக்கும் மற்றும் கப்பங்கள் பெற்றுவரும் அவரது தரப்பு உறுப்பினர்களை முன்பள்ளி பாடசாலைகளில் அனுமதிப்பதையே செய்ய வேண்டும்.
பெண்களின் மகற்பேற்று தொடர்பில் பேசுவது பிழையான செயற்பாடாகும். மோசடியான முறையில் பரீட்சையில் தோற்றி சித்தியடையும் பிள்ளைகள் , தொழில் எதுவும் இன்றி அரசியல் செயற்பாடுகளினால் மாத்திரம் சொகுசான வாழ்கையை வாழ்ந்து வரும் பிள்ளைகளைப் போன்ற பிள்ளைகள் தமக்கு தேவையில்லை என்று பல குடும்பங்கள் இருக்கின்றன.
இது அவர்களது தனிப்பட்ட தீர்மானங்களாகும். அது தொடர்பில் நாம் விமர்சனங்களை மேற்கொள்ள முடியாது. பிரதமரின் கூற்று அனைத்து பெண்களுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்றுதான் குருநாகலில் இரண்டாம் புவனேகபாகு மன்னின் அரச மண்டபத்தை உடைத்த அரசியல் வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமால், மன்னனுக்கு அதிகமான மனைவிகள் இருந்ததாக குறிப்பிட்டு அதனை மறைக்க முற்படுகின்றார் என்றார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தையும் விட மிக மோசமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறிவருகின்றது. அதனால் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பொருட்களுக்கு நிர்ணய விலையை வழங்க முடியாது.
முறையான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாது . அரசாங்கத்தினால் எந்த காரியத்தையும் முறையாக செய்ய முடியாது. மின் கட்டணங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்துவிட்டு , பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைதியாக இருக்கின்றார்.
இது போன்ற கோமாளிகளையும், மரப்பாவைகளையும் வைத்துக் கொண்டு எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது எனவும் கேள்வியெழுப்பினார்.