அசாம் மாநிலம் கவுகாத்தியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடையில் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களே ஈடுபடுகிறார்கள். சில சமயங்களில் விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழக்கும் சோக சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருவதை பார்க்கிறோம். தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்திலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதற்காக தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தாலும் அதனை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் வரவில்லை. பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என பலரும் வலியுறுத்தியும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் பாதாள சாக்கடையை அறிமுகம் செய்வதற்கு ரோபோ ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை கவுஹாத்தி மேம்பாட்டு துறை அமைச்சர் சித்தார்த்த பட்டாச்சார்யா திறந்து வைத்தார். இந்த ரோபோவுக்கு ‘BANDICOOT’ என பெயர் வைத்துள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் இந்த ரோபோ வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தால் உள்நாட்டிலேயே இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய மனிதர்களுக்கு பதிலாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மூன்றாவது நகரம் கவுஹாத்தி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழகத்தின் கோயம்புத்தூர் மற்றும் ஹரியானா மாநிலம் குருகிராமில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் நகரங்களுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.