மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 மாத சிறை தண்டனையும், 21 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கெடா மாநிலத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா என்பவர் நாசிக் கண்டார் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.
இவர், கடந்த மாதம்தான் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு திரும்பினார். மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்ற நிசார் முகமதுவுக்கு முதலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது.
ஆனால், 2-ஆம் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் நிசார் முகமதுவை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்க வேண்டும் என மலேசியா அரசு உத்தரவிட்டது.
ஆனால் இதனை மீறி நிசார் முகமது வெளி இடங்களில் சுதந்திரமாக வலம் வந்தார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஹோட்டல் பணியாளர்கள் என பல பகுதிகளைச் சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தொற்று படுவேகமாக பரவியது.
கொரோனாவை கடுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் நிசார் முகமதுவால் 45 பேருக்கு கொரோனா பரவியதால் இதற்கு சிவகங்கை கிளஸ்டர் என மலேசியா அரசு பெயரிட்டது.
ஒரு நபர் மூலம் பலருக்கும் கொரோனா பரவியதால் அதற்கு கிளஸ்டர் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில் நாசிக் கண்டார் ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமதுவை மலேசியா அரசு, விதிகளை மீறி கொரோனாவை பரப்பியதற்காக கைது செய்தது. அவருக்கு 5 மாத சிறை தண்டனையும் 21 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.