நேபாள நாட்டில் பருவமழை தொடங்கிய பின்னர் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாத நிலையும், சிலருக்கு வீடுகளே இல்லாத நிலையும் ஏற்பட்டது.
சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒருபுறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்படத் துவங்கியது. நேபாள நாட்டில் உள்ள வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள சிந்துபால்சோக் நகரில் இரண்டு கிராமங்கள் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த 12 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தவிர்த்து அங்கு இருந்த 38 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.