பல ஆண்டுகளாக தைவானை சீனா உரிமைகொண்டாடிவரும் நிலையில் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்க தைவான் திட்டமிட்டுள்ளது.
கிழக்காசிய நாடுகளில் ஒன்றாகவும் சீனாவின் அண்டை தீவு பிராந்தியமாகவும் தைவான் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பானிடம் இருந்து விடுதலை பெற்ற தைவானை சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அது தனி நாடு இல்லை எனவும் அது தங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதியெனவும் சீனா கூறி வருகிறது. மேலும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தைவானுக்கு சீனா முட்டுக்கட்டை போட்டி வருகிறது. ஆனால் நாங்கள் சீனப் பிரதேசம் இல்லை என தைவான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இனால் தைவானில் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு அப்பகுதியில் படைகளை சீனா குவித்து வருகிறது.
இதனிடையே சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவான் தற்போது அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறது. இதனை உறுதிபடுத்தும் வகையில் அமெரிக்கா சுகாதாரத்துறை அமைச்சர் அலெக்ஸ் அஸ்ஸா தைவானுக்கு கடந்த 9 ஆம் தேதி வருகை தந்தார். மேலும் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது சீனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவை கட்டுப்படுத்த தைவான் பிரச்சனையை வேண்டுமென்றே பயன்படுத்த நினைப்பது ஆபத்தில் முடியும் என சீனா நேரடியாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் சீனாவின் அச்சுறுத்தல்களையும் மீறி அமெரிக்காவிடன் இருந்து போர் விமானங்களை வாங்க தைவான் முடிவு செய்துள்ளது. அமெரிக்க விமான உற்பத்தியாளர் லாக்ஹீட் மார்ட்டினிடமிருந்து எஃப் -16 ரக போர் ஜெட் விமானங்களை 62 பில்லியன் டாலருக்கு வாங்குவதை தைவான் இறுதி செய்ததுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தைவானில் இந்த செயல் சீனாவை மேலும் கோபத்தில் ஆழ்த்தும் என்பதால் கிழக்காசியாவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.