கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், புத்தளம் வாழ் மக்கள் ஒன்றுபட்டதன் காரணமாகவே, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற முடிந்ததென்றும், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு ஒற்றுமையுடன் செயற்பட்டால் இதைவிட பாரிய வெற்றிகளைப் பெற முடியும் என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம், வேப்பமடுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நடந்து முடிந்த பொதுத்தேர்தல், புத்தளம் சிறுபான்மை மக்களுக்கு நல்லதொரு செய்தியைக் கூறுகின்றது. பெரும்பான்மையின கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன முன்னணி ஆகியவற்றின் பின்னால், நாம் பிரிந்து நின்று அரசியல் செய்ததனாலேயே, முப்பது வருடங்களுக்கு மேலாக பிரதிநிதித்துவத்தை இழந்து தவித்தோம். சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் பின்னடைவு அடைந்தோம். பல்வேறு அநியாயங்கள் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்டன.
அனல் மின்சாரம், சீமெந்து தொழிற்சாலை, அறுவைக்காடு போன்றவைகளால் புத்தளம் பிரதேசத்தை நாசம் செய்தனர். அபிவிருத்தியிலும் பின்தள்ளப்பட்டோம். நமக்கென்று பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் இல்லாததனாலேயே இந்த இழிநிலை ஏற்பட்டது.எனவே,
இதனை அடைய வேண்டுமென்ற முயற்சியில் “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” நீண்டகாலமாக ஈடுபட்டது. பல்வேறு தியாகங்களைச் செய்தோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இதற்கு உடன்பாடு கண்டார்.
எல்லோரும் ஒன்றுசேர்ந்து கூட்டமைப்பை உருவாக்கியதனாலேயே, நாம் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என்றார்.