மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை தனியார்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என அதன் தலைவரும் விண்வெளித் துறையின் செயலாளருமான சிவன் தெருவித்துள்ளார்.
20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கடந்த மே மாதம் அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்கள் இஸ்ரோவுக்கு சொந்தமான கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு வகை செய்யும் கொள்கை ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இது முழுவதும் இஸ்ரோவை தனியார் நிறுவனங்களிடம் வழங்கும் நடவடிக்கை என எதிர்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விண்வெளித் துறையில் இந்தியாவின் திறன்களை வெளிக்கொண்டு வருவது தொடர்பான நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விண்வெளித்துறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் பெரிய மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். இஸ்ரோ தனியார்மயமாக்கப்படும் என தவறான தகவல்கள் மக்களிடையே நிலவுகிறது. ஆனால் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள், இஸ்ரோவை தனியார்மயமாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த புதிய சீர்திருந்த்தங்கள் தனிநபர்கள் விண்வெளித்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டுமே உதவும். இல்லாவிட்டால், அவை இஸ்ரோவால் மேற்கொள்ளப்படும். விண்வெளி துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த மசோதா வரைவு கிட்டத்தட்ட இறுதியாகி உள்ளது. அது விரைவில் மத்திய அமைச்சரவை முன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
உண்மையில், இஸ்ரோவின் நடவடிக்கைகள் அதிகரிக்கப் போகின்றன, மேலும் வழக்கமான உற்பத்தி நடவடிக்கைகளை விட, அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இஸ்ரோ தனது வளங்களை சிறப்பாகப் பயன்படுத்த முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.



















