ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக பகிரங்கமாக கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறி, அந்த கட்சியின பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியல் விமர்சகர்கள், பொதுஜன பெரமுனவின் செயலாளரின் இந்த கடிதம் மூலம் வாக்களித்த மக்களின் உரிமைகள் மாத்திரமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் இறையாண்மை பலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவில் குறைப்பாடுகள் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்லாது, அந்த கட்சிக்கு ஆதரவளிக்கும் சிங்கள தேசிய அமைப்புகளும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
குறிப்பாக இரட்டை குடியுரிமை சம்பந்தமான விடயம் மற்றும் கணக்காய்வு ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு என்பன நீக்கப்படுவது தொடர்பாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவில் நாட்டின் ஒருமைப்பாடு சம்பந்தமான விடயமும் இடம்பெறவில்லை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேமநாத் சீ தொலவத்த ஆளும் கட்சியின் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து 20வது திருத்தச் சட்ட வரைவு குறித்து விமர்சித்தமைக்கான விளக்கத்தை கோரி, சாகர காரியவசம் அவருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.