முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது தொடர்பாக விஜய் சேதுபதி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கவிஞர் தாமரை கேட்டு கொண்டுள்ளார்.
இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் 800 என்ற படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முத்தையா முரளிதரன் சிங்கள அரசின் கைக்கூலி என்றும் எனவே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கண்டன குரல்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறிய முரளிதரன் தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராஜபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்ததாகவும்,தமிழரின் ரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்தநாள் இனியநாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.காணாமல் போன தம் வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று முரளிதரன் வர்ணித்ததாகவும்,
முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது என்றும் தாமரை எச்சரித்துள்ளார்.இதனிடையே, இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவு மூலம், நடிகர் விஜய்சேதுபதிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், உலகம் முழுவதுமிருந்து இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்றும், தங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்