போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாதிருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும், பாதாள உலகத் தலைவனுமான மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மாகந்துரே மதுஷ் கொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று மிகப்பெரிய விடயமல்ல. அதுபோன்ற கொலைகள் இந்த நாட்டில் இதற்கு முன்னரும் அரங்கேறியிருக்கின்றன.
ஆனால் இந்தக் கொலை மூலம் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மற்றும் அதனுடன் தொடர்பிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாவது தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டுபாயில் இருந்து தனியார் ஊடகமொன்றுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் மதுஷ் பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.
அதில், 80க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தன்னுடன் கடத்தல் விவகாரத்தில் தொடர்பில் இருப்பதை கூறியிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு தடுப்பில் இருந்த நிலையில் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒருவேளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தால் அவருடன் போதைப்பொருள் வர்த்தகம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலும் அம்பலமாகியிருக்கும். ஆகவேதான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் உருவாகியுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.