கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணித்தலைவர் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
கொல்கத்தாவை 149 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்திய பஞ்சாப் 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். மந்தீப் ஓட்டங்கள் குவிக்க திணறியதால், ராகுல் துரிதமாக ஓட்டங்கள் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது.
இதன்பிறகு, மந்தீப்பும் பொறுப்பாக விளையாடத் தொடங்கியதால், இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தனர்.
பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து, வருண் சக்கரவர்த்தி சுழலில் ராகுல் (28 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு களமிறங்கிய கிறிஸ் கெயில் வருண் மற்றும் சுனில் நரைன் பந்துகளில் சிக்ஸர்களைப் பறக்கவிட வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 8-க்கு வந்தது.
மந்தீப்பும் கெயிலுடன் ஜோடி அமைக்க, ஆட்டம் கொல்கத்தாவிடம் இருந்து நழுவியது. மந்தீப் சிங் 49-வது பந்திலும், கெயில் 25-வது பந்திலும் அவர்களது அரைசதத்தை எட்டினர்.
இதன்பிறகு, பவுண்டரிகள் பறக்க வெற்றிக்குத் தேவையான ஓட்டங்கள் ஓவருக்கு 6-க்கு கீழ் குறைந்தது.
கடைசி 2 ஓவர்களில் 3 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், பெர்குசன் பந்தில் கெயில் ஆட்டமிழந்தார்.
அவர் 29 பந்துகளில் 51 ஓட்டங்கள் சேர்த்தார். இதையடுத்து, நிகோலஸ் பூரனும், மந்தீப் சிங்கும் வெற்றியை உறுதி செய்தனர்.18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்த பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது பஞ்சாப் தொடர்ச்சியாக பெறும் 5-வது வெற்றி. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மந்தீப் சிங் 56 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.