ஐரோப்பாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.. குறிப்பாக இந்த நோயின் பாதிப்பு ஐரோப்பாவி ல் மிகப் பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹான்ஸ் கிளக், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த நாடுகளின் 53 பிராந்தியங்களில் வாராந்திர கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 15 லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டிவிட்டது.
அந்த நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை, கடந்த மே மாதத்துக்குப் பிறகு இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் கடந்த வாரம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் என்று பொதுவாக குறிக்கப்படும் நாடுகள் மட்டுமின்றி, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துா்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளையும் ஐரோப்பிய பிராந்திய கொரோனா புள்ளிவிவரப் பட்டியலில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.