கார்டூன் விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தேவாலயத்தில் புகுந்து மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடம் காட்டி பேச்சு , கருத்து சுதந்திரம் தொடர்பாக விவாதம் நடத்திய சாமுவேல் பேட்டி என்ற 46 வயதான பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரை கடந்த 16-ஆம் தேதி 18 வயது மாணவர் ஒருவர் தலைதுண்டித்து கொலை செய்தார். அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என கூறப்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இதனை இஸ்லாமிய பயங்கரவாதம் என குற்றம் சாட்டினார். பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்துக்கு ஈரான், துருக்கி, செளதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபருக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே பிரான்ஸின் நைஸ் நகரில் உள்ள நோட்ரி டேம் பெசிலிகா என்ற தேவாலயத்தில் கடந்த கடந்த மாதம் 29 ஆம் தேதி கத்தியுடன் புகுந்த பயங்கரவாதி ஒருவன், அங்கு பிராத்தனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிசூடு நடத்திய பயங்கராவதிய சுட்டுப்பிடித்த பிரான்ஸ் காவல்துறையினர் சிகிச்சைகாக அவனை மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 21 வயதான இஸாயி என்ற அந்த பயங்கரவாதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் விசாரணையில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அந்த பயங்கரவாதி துனீசியாவை சேர்ந்தவர் என்பதும் அவர் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி வந்து அங்கிருந்து பிரான்ஸ் வந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.