பிரபல இயக்குனரும், வசனகர்த்தாவுமான சினிமா எழுத்தாளர் ஈரோடு சவுந்தர்(வயது 63) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றியவர்.
அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி ஆகிய படங்களையும் இயக்கிய ஈரோடு சவுந்தர், சமுத்திரம் படத்திற்கு கதை வசனம் எழுதியதோடு, தசாவதாரம், லிங்கா உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.
சமீபத்தில் அய்யா உள்ளேன் அய்யா என்ற பெயரில் தனது பேரனை வைத்து படம் இயக்கி வந்த ஈரோடு சவுந்தர் சிறுநீரகப் பாதிப்பால் அவதியுற்று வந்தார்.
இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறுதி சடங்கு நாதகவுண்டன் பாளையத்தில் இன்று நடைபெறுகிறது.