அகதி ஒருவரை நாடு கடத்த உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட, நீதிமன்றம் ஒன்று அவரை நாடு கடத்த மறுத்துவிட்ட சம்பவம் பிரான்சில் நடைபெற்றுள்ளது.
பங்களாதேஷிலிருந்து துன்புறுத்தலுக்குத் தப்பி 2011ஆம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அகதி ஒருவர், மருத்துவ காரணங்களுக்காக தற்காலிக வாழிட உரிமம் பெற்று Toulouse என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்.
2017ஆம் ஆண்டு, பிரான்ஸ் புலம்பெயர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபர் தனது ஆஸ்துமா பிரச்சினைக்காக பங்களாதேஷிலேயே சிகிச்சை பெறலாம் என்று கூறிவிட, உள்ளூர் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.
ஆனால், நீதிமன்றங்கள், மாறாக, எதிர்பாராத தீர்ப்புகளை அளித்தன. கடந்த ஜூன் மாதம், Toulouse நீதிமன்றம் ஒன்று, அவருக்கான மருந்துகள் பங்களாதேஷில் கிடைக்காது என்று கூறி அவரை நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற தடைவிதித்துவிட்டது.
அதற்கு ஒரு படி மேலே போய், கடந்த மாதம் Bordeaux மேல் முறையீட்டு நீதிமன்றம், அந்த அகதி ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினையால் அவதியுறும் நிலையில், அவர் பங்களாதேஷிற்கு நாடு கடத்தப்பட்டால், அங்கிருக்கும் காற்று மாசு காரணமாக அவர் உயிரிழக்கலாம் என்று கூறி, அவரை நாடு கடத்த தடை விதித்துவிட்டது. இந்த தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
காரணம், சுற்றுச்சூழலை காரணம் காட்டி ஒருவரை நாடு கடத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இதுதான் என கருதப்படுகிறது.
அத்துடன், நீதிமன்றம் கூறியது போலவே, பங்களாதேஷின் மாசு நிலை மிக மோசமாகத்தான் உள்ளது.
யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களின் காற்று மாசு மோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில், பங்களாதேஷ் 179ஆவது இடத்தில் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.