தரம் 05 ஸ்கொலசிப் சுப்பர் ஸ்டார் அன்பழகன் இன்று (02.04.2021) காலை காலமாகிவிட்டார் என்று அறிந்த செய்தியை நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது ஆசிரியர் லகிதன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அன்பழகனுக்கும் எனக்கும் ஆன உறவு சிறு வயது முதல் ஏற்பட்டது. அன்பழகன் என்னிடம் தரம் 10, 11 வகுப்புகளில் தென்மராட்சி மட்டுவில் வளர்மதியில் பயின்ற மாணவன். உடன் கற்பித்த ஆசிரியன். அன்பொளி ஸ்கொலசிப் வகுப்பு முயற்சிகளில் என்னை மேடையேற்றி வாழ்த்துப் பெறும் பிரியன்.
ஒவ்வொரு வருடமும் 500 பேருக்கு மேலானவர்கள் அன்பழகனிடம் கற்று சித்தி பெறுகின்ற அளவுக்கு யாழ்ப்பாணத்தின் புலமைப்பரிசில் வெற்றியை தீர்மானிக்கின்ற முக்கிய சக்தியாக அன்பழகன் திகழ்தார் என்பது மிகை மொழியல்ல.
ஸ்கொலசிப் வகுப்பு நிறைவு நாள் என்றாலென்ன வெற்றி விழா என்றால் என்ன தியாகலிங்கம் சேர், ஞானகாந்தன் சேர், ஈஸ்வரன் சேர், நான் என வழமையாகப் பிரசன்னமாக வேண்டிய விருந்தினர்களாக எழுதப்படாத விதி ஒன்றைப் பேணிவந்தான். தன்னை ஏற்றி வைத்த ஏணிகள் என்று தன் பிள்ளைகளுக்கு எங்களை அறிமுகம் செய்வான்.
விஞ்ஞானத் துறையில் பயின்று ஆரம்பக் கல்வி ஆசிரியராகிய சிறப்பு அன்பழகனுக்கு உண்டு. அந்த விஞ்ஞானக் கல்விக்கான ஈடுபாடு என்னால் ஏற்பட்டது என்பது அன்பழகன் எனக்கு வழங்கும் மதிப்பு மொழி.
இதைவிடப் பாடுதல் ஆடுதல் கைவினை என அனைத்திலும் சிறப்புத் தேர்ச்சி அன்பழகனிடம் உண்டு. இதனால் பிள்ளைகளை ஈர்க்கும் இனம்புரியாத கவர்ச்சி அன்பழகனிடம் மிகுந்திருந்தது.
எந்தவொரு விடயத்தையும் சலிப்பின்றி நேரம் செல்வது தெரியாமல் அத்தனை பேரையும் ஈர்த்து வைத்துக் கற்பிப்பதில் அன்பழகனுக்கு நிகர் அன்பழகன்தான்.
அன்பழகன் மூலம் பலர் நன்மை பெற்றனர். தொழில்வாய்ப்புப் பெற்றனர். அத்தனைபேருக்கும் அமுதசுரபியாக வாரி வழங்கினான்.
நோயுற்று இருந்த வேளையிலும் தனது கற்பித்தல் பணியை குறைவின்றி மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கை அன்பழகனிடம் இருந்தது.
எங்கள் மண்ணில் ஆரம்பக்கல்விக் கற்பித்தலுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க ஆசிரியர் என்றால் நான் உரத்து உதாரணப்படுத்துவது அன்பழகனைத்தான். அன்பொளி நிறுவனத்தில் மாத்திரமல்ல தான் கற்பித்த பாடசாலைகளிலும் பெரும் எண்ணிக்கையில் மாணவரைச் சித்தியடையச் செய்து பெருமை பெற்றான்.
விதி யாரைத்தான் விட்டது. இன்று அது தனது வலிமையை உறுதிப்படுத்திவிட்டது. விதியை நொந்து கொள்வதைத்தவிர எங்களாலும் என்ன செய்துவிட முடியும்?
(பூதவுடல் தற்போது (வெள்ளி) கொழும்பு வெள்ளவத்தை றோயல் மருத்துவமனையில் உள்ளது என்றும் நாளை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டு யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமை 04.04.2021 காலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது எனவும் அறிகின்றேன்.) என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.