கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வரு
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
ஆலய வரலாறு :
முன் காலத்தில் காரை வனமாக இருந்த இப்பகுதியில் வசித்த மக்கள், பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு பசு தினமும் காரை வனத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு காரை மரத்துக்கு அடியில் பாலை சுரந்து வந்தது. இதனைப் பார்த்த பசுவின் உரிமையாளர் இதுபற்றி ஊர் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒலித்த அசரீரி, ‘நான் இங்கு அரங்கனாக எழுந்தருளி உள்ளேன்’ என்றது.
இதைத் தொடர்ந்து அங்கு சுயம்புவாக இருந்த பெருமாளை, சிறிய குடில் அமைத்து வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரங்கநாதருக்கு சிறிய கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று விரும்பினர். இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் வந்த இடத்திற்கு சென்று மக்கள் பார்த்தனர். அப்போது ஒலித்த அசரீரி, ‘வெடி சத்தம் கேட்ட ஈசானிய மூலையில் பாறைகளும், வாயு மூலையில் மண்ணும் கிடைக்கும். அதை கொண்டு கோவில் கட்டுங்கள்’ என்றது.
அசரீரியின் வாக்குப்படியே அந்தப்பகுதியில் இருந்து கிடைத்த பாறாங்கற்களையும், மணலையும் கொண்டு கோவில் கட்டி எழுப்பப்பட்டது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்ததால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து 27.1.2002-ல் 3 நிலை ராஜகோபுரத்தை அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.
ஆலய தரிசனம் :
திருக்கோவிலை அடைந்தவுடன் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அர்த்தமண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் ஒரே சன்னிதியில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், அதே பீடத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் ஊஞ்சலில் பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாதர் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கிறார். அவருடன் செங்கோதை, பூங்கோதை தாயார் வீற்றிருக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தில் நின்று கருவறையில் எழுந்தருளிய அரங்கநாதரை வழிபடலாம். சுமார் 4½ அடி உயரம் கொண்ட திருவுருவம், அலங்கார பிரியர் என்பதால் மலர் மாலைகள் சூழ காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்களுடன், நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு மூர்த்தியாய் வெளிப்பட்ட அரங்கநாதருக்கு முதலில் பூஜை நடைபெற்ற பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.
மூலவருக்கு வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தென் பகுதியில் செங்கோதையம்மன் தாயாரும் தனித்தனி சன்னிதியில் நின்றபடி அருள்புரிகின்றனர். கோவிலின் தென்புறத்தில் தேவியரோடு பரமவாசுதேவன் தனி சன்னிதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.
கோவிலின் பின்புறம் தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளிஅண்ணன் சுவாமி ஆகியோர் தனிசன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். மகா மண்டபத்தை ஒட்டி ராமதூதனான ஆஞ்சநேயர், கோரிக்கை மாலைகளை சுமந்து வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கோவிலின் பின்புறத்தில் தல விருட்சமாக காரை மரம் விளங்குகிறது. தும்பிக்கை ஆழ்வார் சன்னிதிக்கு பின்புறம் உள்ள பூவரச மரத்தில், பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
சாப விமோசனம் பெற்ற ரம்பை :
முன்னொரு காலத்தில் விஸ்வாமித்திரர் பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தார். அதைக் கண்டு பயந்த தேவர்கள், அவரது தவத்தைக் கலைக்க ரம்பையை அனுப்பினர். ரம்பை பூலோகம் வந்து விஸ்வாமித்திரரின் முன்பு நின்று தவத்தைக் கலைக்க முயன்றாள். இதனால் கோபமடைந்த விசுவாமித்திரர், ‘நீ கல்லாகப் போவாய்’ என்று சபித்தார். அதன்படி ரம்பை கல்லாக மாறி அவரது ஆசிரமத்தின் முன்பு பல ஆண்டுகளாக கிடந்தாள்.
இந்த நிலையில் முனிவர் ஒருவரான சபிக்கப்பட்ட கிருதாசீ என்ற தேவ கன்னிகை, ராட்சத உருவம் கொண்டாள். அவள் ஒரு முறை விசுவாமித்திரர் ஆசிரமம் வந்து அவரை தொந்தரவு செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், கல்லாக கிடந்த ரம்பையை எடுத்து ராட்சசியின் மீது வீசினார். இருவரும் அருகில் இருந்த பத்ம தீர்த்தத்தில் விழுந்தனர். அந்தத் தீர்த்தம் பெருமாளால் உருவாக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் தங்கள் சுயஉருவை அடைந்தனர். பின் இத்தல இறைவனை வழிபட்டு தேவலோகம் சென்றனர்.
திருவிழாக்கள் :
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன்ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, பொங்கல் திருநாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது.
சிந்தையை தெளியவைக்கும் பத்மதீர்த்தம் :
சோம வம்சத்தை சேர்ந்த நந்தபூபாலர் தர்மநெறியுடன் இந்த பூமியை ஆட்சி செய்து வந்தார். பின்னர் அவர் ஆட்சி பொறுப்பை தனது புத்திரன் தர்மகுப்தரிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தந்தையை போல் தனயனும் சிறப்பாக தர்மநெறியுடன் ஆட்சி செய்தார்.
ஒரு முறை அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் போயிற்று. இதையடுத்து தர்மகுப்தரை, அவரது மந்திரிகள், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நந்தபூபாலரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் மகனை அழைத்து கொண்டு ஜைமினி மகரிஷியை சந்தித்து, தனது மகன் சாபவிமோசனம் பெற வழிகூறுமாறு வேண்டினார்.
அதை கேட்ட மகரிஷி, ‘தென்சமுத்திர கரையோரம் பாலமலை இருக்கிறது. அங்குள்ள பத்மதீர்த்தத்தில் புனித நீராடி நாராயணனை பிரார்த்தனை செய்து வந்தால் பலன் கிடைக்கும்’ என்றார். அதன்படி பாலமலை வந்த தர்மகுப்தன் தினமும் பத்மதீர்த்தத்தில் நீராடி அரங்கனை ஒரு ஆண்டு காலம் வழிபட்டு வந்தார். தர்மகுப்தனின் பக்தியில் மனம் இரங்கிய அரங்கன், புத்தி சுவாதீனம் தெளிந்து நீங்கி மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வரம் வழங்கினார்.
அமைவிடம் :
கோவை காந்திபுரத்தில் இருந்து பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூருக்கு அடிக்கடி அரசு டவுன் பஸ்கள் இருக்கிறது. அங்கிருந்து தனியார் ஜீப்புகள் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால மலைக்கு செல்லலாம். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. தனியே நடந்து செல்வதோ, மோட்டார் சைக்கிளில் செல்வதோ சவுகரியம் அல்ல.கிறார்.