மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது 50 ஆயிரம் ரூபாய் சிகிச்சை கட்டணமாக முன்பணத்தை குடும்பத்தினர் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் நோயாளிக்கு உடல் நிலை மோசமடைந்து 20ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அங்கே மருத்துவமனை நிர்வாகத்தினர் ஊசி மருந்து செலுத்துவதற்காக 35 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி நோயாளியின் மனைவியிடம் தெரிவித்தனர்.
இந்த பணத்தை செலுத்திய பின்னர் 3 நாள் கழித்து 24ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகத்தினர் நோயாளியின் மனைவியிடம் மீண்டும் கட்டணம் செலுத்த கேட்டு உள்ளனர்.
இதனைத் தொடந்து, அவர் சம்பவத்தன்று 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், மீதி 50 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமும் செய்திருந்தார்.
இறுதியாக, பணத்தை பெற்று கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் நோயாளி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேலும் அதற்கான சான்றிதழை அளித்தனர். அந்த சான்றிதழில் 21ஆம் தேதி நோயாளி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கண்டு கொதிப்படைந்த அவர், 21ஆம் தேதியே உயிரிழந்த தன் கணவரின் பிணத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக நாடகமாடி பணம் பறித்தது அவருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தும்படி சிவாஜிநகர் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி சிவாஜி நகர் காவல்துறையினர் அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படத்தில் வரும் காட்சிகள் போல் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.