யாழ் .ஆயர் இல்லத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு, உப்புமாவெளி பகுதியில் உள்ள காணியில் தொடர்ச்சியாக மண்ணகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக ஆயர் இல்லத்தின் காணிக்கு பொறுப்பான அருட்தந்தையர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
காணியின் அபிவிருத்தி நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எல்லையை மீறி சென்ற நிலையில், ஒப்பந்தத்தை முடிவுறுத்தி தமது காணியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஆயர் இல்லம் சட்டதரணியூடாக அறிவித்தும், பிரதேச செயலாளர் அனுமதியை இரத்து செய்யுமாறு கணியவள திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்த பின்னரும் ,குறித்த மண் வியாபாரி அத்துமீறி மண்ணகழ்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் அருட்தந்தையர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஆயர் இல்லம் ஒப்பந்தக்காரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதாக ஆயர் இல்ல சட்டதரணியூடாக அறிவித்த பின்னரும் ,குறித்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட மண் விற்பனையாளர் தொடர்ச்சியாக மண்ணகழ்வில் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு யாழ் .ஆயர் இல்லத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு, உப்புமாவெளி பகுதியில் உள்ள இயற்கை மணல் திட்டுகள் நிறைந்த 32 ஏக்கர் காணியை முல்லைத்தீவை சேர்ந்த நபர் ஒருவருக்கு பராமரிப்பை மேற்கொண்டு காணியை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு அங்கிருக்கும் மணல் திட்டுக்களை சமப்படுத்தி தென்னை ,கயூ போன்ற மரங்களை நடுகை செய்து தருமாறும் இதன்போது, பெறப்படும் மணலினை ஒரு லோட்டுக்கு 5000 ரூபாவை ஆயர் இல்லத்துக்கு செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என மேற்கொள்ளபட்ட ஒப்பந்தத்தின் பலனாக கடந்த மூன்று வருடங்களாக குறித்த காணியில் மண் ஏற்றி விற்பனை செய்யும் நடவடிக்கையில் குறித்த நபர் ஈடுபட்டு வந்துள்ளார்.
குறித்த அனுமதி தொடர்பிலான ஒப்பந்தம் பிரபல சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் முன்னிலையில் கடந்த 2018 இல் கைச்சாத்தாகியுள்ளது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த சில வருடங்களாக மண் எடுத்து செல்லப்பட்ட நிலையில், உப்புமாவெளி, உடுப்புக்குளம் மக்கள் மண்ணகழ்வுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு தரப்பினரிடம் முறையிட்ட போதிலும், தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் ,குறித்த காணியில் தொடர்ந்தும் மணல் அகழப்பட்டு வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்கப்படும் நடவடிக்கை இடம்பெற்று வந்ததால் இரு தரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு புறம்பாக நிலமட்டத்தின் கீழாக மணல் அகழ்வு செல்லும் அபாயம் தொடர்ந்திருக்கின்றது.
சம்பவம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து உப்புமாவெளி கிராம மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முயற்சித்த வேளை சில தலையீடுகளால் இடை நிறுத்தப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்த இளைஞர்களை சட்ட நுணுக்கம் தெரிந்த சிலர் தொடர்புகொண்டு அவர்களின் பதிவுகளை நீக்க வலியுறுத்தியதாகவும் தெரியவருகின்றது.
கடந்த காலப்பகுதியில் கிராம மக்களால் தொடர்ச்சியாக பிரதேச ஊடகவியலாளர்களிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் படி மணல் அகழ்வின் ஆபத்துத் தொடர்பில் அந்த காணிக்குப் பொறுப்பான பங்குத்தந்தையர்களை ஊடகவியலாளர்கள் சிலர் அணுகிய போதிலும் தமது சம்மதத்துடனேயே மணல் அகழ்வு நடைபெறுவதாக அவர்கள் பதில் வழங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 12.01.2021 அன்று ஆயர் இல்லத்தினைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த அடிகளார் ஒருவர் சம்பவ இடத்தினைப் பார்வையிட்ட வேளை தம்மால் வழங்கப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய திருச்சபையின் பெயரால் ஒரு பகுதியின் இயற்கை வளம் அழிக்கப்படுகின்ற அவல நிலை ஆயர் இல்லத்தின் அதி உயர் தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆயர் இல்லம் பிரதேச செயலாளருக்கும், புவிச்சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் பணியகத்திற்கும் மணல் அகழப்படும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும் தாம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்திக்கொள்வதாகவும் ஆயர் இல்லத்தின் சட்ட தரணி மதுரநாயகத்தின் ஊடக ஒப்பந்தத்தை முடிவுறுத்தும் கடிதம் அனுப்பியும் நேரிலும் சந்தித்து விளக்கமளித்திருக்கின்றது.
பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளருக்கு தகவல் வழங்கிய நிலையில், மாவட்டச் செயலாளர் ,பிரதேச செயலாளர் ஆகியோர் புவிசரிதவியல் திணைக்களத்துக்கு மண்ணகழ்வு நடவடிக்கையை நிறுத்துமாறும், அனுமதியை இரத்து செய்யுமாறும் 15.03.2021 அன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
பிரதேச செயலாளரால் எழுதப்பட்ட கடிதத்தின் பிரதிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உட்பட்டவர்களுக்கு கூட அனுப்பப்பட்டிருக்கின்றன.
இதனிடையே மணல் அகழ்வினை நிறுத்துவதற்காக புவிச்சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் பணியகத்தின் கொழும்பு அலுவலகத்துக்கும், ஆயர் இல்லம் ஒப்பந்தத்தை முடிவுறுத்தும் கடிதத்தை அனுப்பியுள்ளது.
மேற்குறித்த முயற்சிகள் எவையும் யாழ்.மறைமாவட்டத்தின் உயர் பீடத்திற்கே கைகூடாத நிலையில், முல்லைத்தீவு நீதிமன்றில் யாழ்.மறைமாவட்ட ஆயர் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கில் ஆயர் இல்லத்துக்கும், ஒப்பந்ததாரருக்கும் சாட்சியாளராக கையொப்பமிட்டிருந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஒப்பந்ததாரரின் பிரதான சட்டவாளராக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்தநிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஆயர் இல்லத்தின் உத்தரவை மீறி காணியை விட்டு வெளியேறுமாறு சட்டதரணியூடாக அறிவித்த பின்னரும் அந்த காணியிலிருந்து மணல் வியாபாரியால் மணல் அள்ளிச் செல்லப்பட்டு வருகின்றது.
ஆயர் இல்லத்தின் அனுமதியோடு குறித்த ஆயர் இல்லத்தின் காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வு தொடர்பில் அறிக்கையிடுவதற்காக இன்று (3) சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்களை ஒப்பந்தம் மேற்கொண்ட மண் விற்பனை செய்யும் நபர் காணியில் நுழைய விடாது தடுத்ததோடு, தாம் அனைத்து அனுமதிகளோடும் மண்ணகழ்வில் ஈடுபடுவதாகவும், கடந்த வருடங்களில் மண்ணுக்காக 66 இலட்சம் ரூபா பணம் ஆயர் இல்லத்துக்கு செலுத்தி உள்ளதாகவும் ,ஒப்பந்தம் முடியும் வரை காணியில் மண் அகழவுள்ளதாகவும் ஒப்பந்தக்காரரின் பராமரிப்பில் காணி உள்ளதால் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான குறித்த காணியில் அனுமதியோடு மண்ணகழ்வில் குறித்த நபர் ஈடுபட்டு வரும் வேளை அதனை அண்டிய ஆயர் இல்லத்தின் ஏனைய காணிகளில் சட்டத்துக்கு புறம்பாக பிரதேச மண் கொள்ளையர்களால் மண் அகழப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் சுனாமி போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் குடியிருப்பு மகுதிக்குள் நீரை உட்புகவிடாது பாதுகாத்த இயற்கை மணல் திட்டுக்கள் அழிவடைந்து செல்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காணியின் அபிவிருத்தி நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எல்லையை மீறி சென்ற நிலையில், ஒப்பந்தத்தை முடிவுறுத்தி தமது காணியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஆயர் இல்லம் சட்டதரணியூடாக அறிவித்தும், பிரதேச செயலாளர் அனுமதியை இரத்து செய்யுமாறு கணியவள திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்த பின்னரும் ,குறித்த மண் வியாபாரி அத்துமீறி மண்ணகழ்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது தொடர்பில் ஆயர் இல்லத்தின் காணிக்கு பொறுப்பான அருட்தந்தையர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மண்ணகழ்வில் ஈடுபட்டு வரும் நபர் சிரேஸ்ட சட்டதரணி ஒருவருடைய உறவினர் எனவும் ,அவரின் ஆதரவின் துணிச்சலுடனேயே தொடர்ச்சியாக இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.