‘‘கௌதாரிமுனையில் சீனாவினால் அமைக்கப்பட்டிருக்கும் கடலட்டை பண்ணைகள் அகற்றப்படமாட்டாது. இப்பகுதியில் கடல் வாழ் உயிரியல் பண்ணைகள் உருவாக்கப்படும். புதிதாக மீன்பிடித் துறைமுகம் விஸ்தரிக்கப்படும்‘‘ என்று கடந்த வாரம் கௌதாரிமுனையில் உள்ள சீன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கடலட்டை வளர்ப்பு பண்ணையைப் பார்வையிட்ட பின்னர் இலங்கையின் மீன்பிடிக் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு காணொளி பேட்டியை வழங்கியுள்ளார்.
கட்டுரையாளர் திபாகரன் தனது கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் கட்டுரையில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த செய்தியிலிருந்து இலங்கை அரசு கௌதாரிமுனையையும் அதன் அண்டிய பகுதிகளையும் சீன நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கிவிட்டது என்பதும், இது மேன்மேலும் விஸ்தரிக்கப்படும் என்பதுவும் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. எனவே எதிர்காலத்தில் வட-கிழக்கில் சீனாவின் காலூன்றலானது மேன்மேலும் அதிகரிக்கும் என்பதற்கான கட்டியமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
இந்தப் பின்னணியில் சீன நிறுவனங்களின் வடபகுதி மீதான அதீத நாட்டமும், உள்நுழைவும் புவிசார் அரசியலில் அண்டை நாடான இந்தியாவின் அரசியல், பொருளியல், பாதுகாப்பு நலன்கள் சார்ந்து ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆராயப்பட வேண்டியது அவசியமானது.
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கௌதாரிமுனை என்பது யாழ் கடல் நீரேரியை தனது வட பகுதி எல்லையாகவும், அதே நேரத்தில் பாக்கு நீரிணையை நோக்கி நீண்ட ஒரு முனைப் பகுதியாகும். இந்தப் பகுதியின் ஒரு பக்கம் ஆழம் குறைந்த சதுப்பு நிலக் கடலையும் மறுபக்கம் பாக்கு நீரிணையின் ஆளங்கூடிய பகுதியையும் கொண்டது.
யாழ் தீவுப்பகுதியை ஊடறுத்து கௌதாரிமுனை வரைக்கும் ஆழமான ஒடுங்கிய கடற்பகுதி அமைந்திருப்பதனால் நடுத்தர கப்பல்கள் கௌதாரிமுனை வரை செல்லக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது. எனவே கௌதாரி முனையில் ஒரு நடுத்தரமான துறைமுகத்தையும் கட்ட முடியும்.
அதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் அங்கு உண்டு. அத்தோடு வீதி போக்குவரத்திற்கு ஒரு குறுகிய தூரத்துக்கு அதாவது சங்குபட்டி வரை வீதி போக்குவரத்தை மேலும் விஸ்தரித்தால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு இலகுவான போக்குவரத்திற்கான வசதி வாய்ப்புக்கள் உண்டு. மேலும் கௌதாரிமுனை பகுதி சனச்செறிவு குறைந்த ஒரு பகுதியாகவும் காணப்படுகிறது.
மிகச் சொற்ப அளவிலான மக்கள் வாழ்கின்ற பகுதியில் சீன நிறுவனங்களுக்கு அதன் கடல்- தரை சார்ந்த பகுதிகளைத் தாரைவார்ப்பதில் இலங்கை அரசுக்கு எந்த சிக்கல்களும் தற்போதைய நிலையில் இல்லை. தற்போது சில பண்ணைகள் உருவாக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் அவை மேன்மேலும் வளர்ந்து செல்லும் என்பது திண்ணம்.
இத்தகைய வளர்ச்சியும் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அரசியல்,பொருளியல் சார்ந்த பாதகமான நிலைமைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமன்றி இதனால் அண்டை நாடான இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் என்ன என்பது பற்றியும் கவனிக்கப்பட வேண்டும்.
அண்மைக் காலமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கத்தில் நேரடி போட்டியாளர்களாக ஒருபுறம் சீனாவும் மறுபுறம் அமெரிக்கா சார்ந்த மேற்குலகமும் – கூடவே இந்தியாவும் இணைந்து களம் புகுந்துள்ளன.
இப்பின்னணியில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் கொந்தளிப்பு நிலை தோன்றியிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் மேற்குலகம், சீனா என்கின்ற இரு அணிகளுக்கு இடையில் ஐரோப்பா -ஆசிய நாடான ரஷ்யா நடுவு நிலைமையில் நிற்கிறது.
இலங்கையின் தீவுப்பகுதிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆகக்கிட்டிய தூரம் 20 மைல்களாக் குறுகிவிடக்கூடிய நிலை காணப்படுகிறது. சீனாவிலிருந்து 2500 மையில்களுக்கு மேலான தொலைவிலிருந்த இந்தியாவின் அணுசக்தி நிலையங்கள் இன்று இலங்கையில் சீனா பிரசன்னமாவதன் மூலம் அவை கைக்கெட்டிய தூரத்தில் அல்லது எறிகணை வீச்சுத் தூரத்தில் வந்துவிட்டன.
இதிலிருந்து இலங்கை, சீனாவுடன் கூட்டுச் சேர்வதற்கான முடிவை எடுத்துவிட்டது என்றே கொள்ளவேண்டும். இலங்கைத்தீவும், ஈழத்தமிழரும் ஏதோ ஒரு வகையில் இரண்டு அணிகளுக்குள் தம்மை இணைத்துக் கொள்ளாமல், அல்லது இவற்றில் ஒன்றைச் சார்ந்து கொள்ளாமல் இலங்கைத் தீவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதற்கான யதார்த்தம் மேலோங்கியுள்ளது.
இங்கே ஈழத்தமிழருடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்று பார்த்தால் வெறுமனே அவர்களுடைய மனவிருப்பஞ் சார்ந்ததாக அல்லாமல் அது சூழல் சார்ந்த வகையில் இணைந்த தமிழ் மக்களுடைய தேவை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இலங்கைத்தீவு புவிசார் அரசியலில் இந்தியாவின் பாதுகாப்பு மண்டலத்துக்கு உட்பட்டது. இப்பகுதியில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் அரசியலிலும் அதன் பாதுகாப்பிலும் பொருளியல் நலனிலும் செல்வாக்கு செலுத்த வல்லது.மறுவளமாக சொல்வதானால் ஈழத்தமிழருடன் இந்தியா தவிர்க்க முடியாத, இணைபிரியாத அரசியல் பண்பாட்டியல் பிணைப்பைக் கொண்டுள்ளது.
எனவே இந்தியாவில் ஏற்படுகின்ற அனைத்து வகையான மாற்றங்களும் ஈழத்திலும் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாது. புவிசார் அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள்ளிருந்து இலங்கையால் வெளியேறிவிட ஒருபோதும் முடியாது. அவ்வாறு வெளியே வரவேண்டுமானால் இலங்கைத்தீவில் ஈழத் தமிழர்கள் இல்லாது அழிக்கப்பட்டால் மாத்திரமே அது சாத்தியமாகும்.
அந்த இலக்கினை அடைவதற்காகவே வேலைவாய்ப்பு,தொழில்விருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தில் சீனா வலுவாக காலுானிற பௌத்த சிங்களப் பேரினவாதம் சீனாவுடன் சேர்ந்து வேகமாக நகர்ந்து செல்கிறது. அதற்குச் சீனா பக்கபலமாகவும், துணையாகவும் நிற்கிறது.
இலங்கைக்குச் சொந்தமான பாக்கு நீரிணையில் உள்ள கச்சத்தீவு உள்ளிட்ட வடபகுதி தீவுகளும் கடற்கரைப் பகுதிகளும் இன்று முழுமையாகச் சீனாவின் கைக்குப் போகும் நிலையை எட்டியுள்ளது.அவ்வாறு போகுமிடத்து அது ஒரு சர்வதேசம் சார்ந்த பிரச்சனையாக மாறும். எனவே பலாத்காரத்தின் மூலமோ அல்லது பல பிரயோகத்தின் மூலமோ அதை இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற வகையிலேயே தீர்க்கப்படமுடியும்.
எனினும் இலங்கை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கான காலையில் இத்தகைய வெளிநாட்டுச் சக்திகள், அரசியல் பொருளியல், பாதுகாப்புக் காரணிகள் கூர்மையாகச் செயற்படத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இவற்றிற்கிடையே அரசியல் இராஜதந்திர மூலோபாய ரீதியில் பொருத்தமான நொதியங்களை அடையாளம் கண்டு அதனூடாக சரியான, மிகப்பொருத்தமான அரசியற் பாதையில் ஈழத்தமிழர்கள் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.