ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் வெளியேற்றப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஒருவர் போலந்தில் காளானை உண்டதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் குறித்த சிறுவனின் ஆறுவயது சகோதரனும் காளான் உண்டதால் பாதிக்கப்பட்ட நிலையில், அவனிற்கு ஈரல் மாற்றுகிசிச்சை செய்யப்பட்டு அவனது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
23 ம் திகதி காபுலில் இருந்து புறப்பட்ட சிறுவர்கள் குடும்பத்தினருடன் போலந்து வோர்சோவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு சிறுவர்கள் நஞ்சுக்காளானை உண்டதை தொடர்ந்து சகோதரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துரதிஸ்டவசமாக இரு சிறுவர்களையும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
ஐந்துவயது சிறுவனிற்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதனால் அவனது சகோதரனை போல ஈரல்மாற்று கிசிச்சையை மேற்கொள்ள முடியவில்லை என்றும், அவரது சகோதரனின் நிலையும் நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை அந்த சிறுவனுக்கும் மூளை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நஞ்சுக்காளானை உண்ட 17 வயது ஆப்கான் யுவதியொருவர் மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆப்கான் குடும்பத்தவர்கள் காட்டுபகுதியொன்றிலிருந்து காளானை பறித்து உணவாக்கி உண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர்களிற்கு போதிய உணவு வழங்கப்படாததன் காரணமாகவே அவர்கள் காளான்களை உண்டனர் என வெளியான செய்திகளை உள்ளுர் மக்கள் நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.