தனது அரசாங்கத்தின் தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran)தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், அரசாங்கத்தை நடத்தத் தெரியவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தானாகவே நேற்றைய தினம் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் தோற்றுவிட்டோம். ஒத்துக்கொள்கிறோம் என்று. அப்படி ஒத்துக் கொள்பவர் பதவியை விட்டு ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும். அவர் இரண்டு விடயங்களை சொன்னார்.
தேர்தலை நடத்துவேன், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று. ஆனால் நாட்டில் உயர்ந்து செல்லும் விலைவாசிகளை கட்டுப்படுத்துவேன் என்று அவர் குறிப்பிடவில்லை. அதேபோன்று விவசாயிகளின் உரம் சம்பந்தமாகவும் அவர் எதுவுமே சொல்லவில்லை.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை குறித்துப் பேசாமல். அரசியலமைப்பை மாற்றுவேன் என்றும், தோல்வியை ஒப்புக் கொள்கிறேன் என்றும் அவர் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.
இதேவேளை, மீனவர்கள் விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர், எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக்காலமாக நடந்திருக்கின்றன.
அவர்களுடைய லட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டது. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதருடன் பேசி இருக்கின்றோம். இவற்றுக்கு என்ன செய்யலாம் என்று இழப்பீடுகள் தொடர்பாகவும் நாம் பேசியிருக்கிறோம்.
வடமராட்சி கிழக்கில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அங்குள்ள மீனவ சங்கங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதித்தூதரிடம் நான் அனுப்பியிருந்தேன். அத்துமீறி பிரவேசித்து எங்களுடைய வளங்களை சுரண்டுவதால் மீன்வளங்கள் அற்றுப்போகின்றது.
2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. அந்த சட்டத்தை அமல்படுத்தினால் இந்த பிரச்சினை பெரிய அளவிலே தீர்ந்து விடும்.
அந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் எச்சரிக்கை ஒன்றை தமிழக மீனவர்களுக்கு விடுத்திருந்தது. ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆகவே இலங்கை கடற்பரப்புக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தது.
இதன் காரணமாக ஓரிரு வருடங்களாக வராமல் இருந்திருந்த தமிழக மீனவர்கள், அந்த சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என தெரிந்த பின்னர் மீண்டும் வர ஆரம்பித்து விட்டார்கள். அத்துமீறுபவர்களை கைது செய்து இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது என்பதை மீன்பிடி அமைச்சு செய்ய வேண்டும்.
ஆகவே சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதே அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால் சட்டங்களை இயற்றி கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம்.
அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்தும். பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பிலும் சில கருத்துப் பரிமாற்றங்களை செய்து இருக்கின்றோம்.இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேசியதன் தொடர்ச்சியாக 13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது.
முழு அதிகாரத்தையும் அமல்படுத்துவதாக இருந்தால் பொலிஸ் அதிகாரத்தையும் அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாகாணத்துக்கும் பொலிஸ்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். முழுமையாக 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும்” என்றார்.