கடந்த இரண்டு வாரங்களில் சிறுவர்களிடையே “மல்டி-சிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்” என்று அழைக்கப்படும் கோவிட் தொற்றுக்கு பிந்தைய நோய்க்குறி தொற்றின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் நலின் கித்துல்வத்த (Nalin Kithulwatta) இதனை தெரிவித்துள்ளார்.
ஆறு சிறுவர்கள் தற்போது மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுபோன்ற 78 சிறுவர்கள் அதிதீவிர பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 150 சிறுவர்கள் மல்டி சிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் உடன் தமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அதில் இருந்து குணமடைந்து இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த மல்டி-சிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி நோய்க்குறியால் பாதிக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சிறுவர்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி, கழுத்து வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இந்த புதிய நோய்க்குறியிலிருந்து பாதுகாப்பதற்காக சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.