கோவிட்-19 வைரஸின் திரிபான டெல்டாவின் துணை திரிபு எனக் கூறப்படும் டெல்டா பிளஸ் திரிபு மிக வேகமாக பரவி வருவதுடன் அது உலகம் முழுவதும் தலைத்தூக்கி வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்துவதில் உயர்ந்த சதவீதத்தை அடைந்த நாடுகளில் தற்போது டெல்டா பிளஸ் திரிபு பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது உலகில் 27 நாடுகளில் டெல்டா பிளஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடாவ(Ranjith Pattuwanthutawa) தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் மக்களில் அதிகளவானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், மக்கள் சுகாதார வழிக்காட்டுதல்களை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டால், டெல்டா பிளஸ் வைரஸ் திரிபு இலங்கையில் பரவும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடைமுறையில் உள்ள சுகாதார ஆலோசனைகளை மீறி செயற்படுவதை சமூகத்தில் காணக் கூடியதாக உள்ளது. இதனால், டெல்டா பிளஸ் வைரஸ் திரிபு பரவுவதை தடுக்க மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
டெல்டா பிளஸ் திரிபுக்கு தற்போது வழங்கப்படும் கோவிட் தடுப்பூசிகள் ஈடுகொடுக்கின்றவா என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும் பட்டுவந்துடாவ குறிப்பிட்டுள்ளார்.