காலி மாவட்டத்தில் மலேரிய நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நோயாளி 47 வயதுடையவர் எனவும் அவர் கடந்த இரண்டு வருடங்களாக உகண்டாவில் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.
நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மலேரிய தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய பரிசோதனை செய்வதற்காக இந்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்ட 150 பேரின் இரத்த மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நபருக்கு உகண்டாவில் மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதார சேவை பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2012ஆம் ஆண்டு இறுதியாக உள்நாட்டு ரீதியில் மலேரியா நோய் தொற்று பதிவாகியிருந்தது. அதன் பின்னர் இலங்கை மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட நிலையில் மலேரியாவை பரப்பும் நுளம்பு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் மலேரியா தொற்றிய நிலையில் இலங்கைக்கு வருகைத்தந்தால் மீண்டும் தொற்று நோய் ஏற்படும் அவதானம் உள்ளதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.