கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தந்த பெண்ணொருவரின் கைப் பையிலிருந்து ரி – 56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்று மீட்கப்பட்டதுடன் குறித்த பெண் தலதா மாளிகை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண், தலதா மாளிகைக்குப் பிரதான நுழைவாயிலின் ஊடாகச் செல்வதற்கு முயற்சித்துள்ளார். எனினும், அங்கிருந்த ஸ்கேன் கருவி அபாய ஒலியை எழுப்பியுள்ளது.
அதன்பின்னர், அந்தப் பெண்ணின் கைப்பை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து தோட்டா ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வத்தேகமவில் வசித்து வந்த குறித்த பெண், தனது கணவன் பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியவர் எனவும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணித்துவிட்டார் எனப் பொலிஸாரிடம் வாக்கு மூலமளித்துள்ளார்.
மேலும் குறித்த பெண்ணின் கணவன் இறந்ததன் பின்னர் காலி பிரதேசத்துக்குச் சென்று குடியேறியுள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அப்பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.