இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்னும் உறுதியாகவில்லை.
இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் பீரிஸ் நேற்று இந்தியா புறப்பட்டுச் சென்றார்.
நாளைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை, அமைச்சர் பீரிஸ் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இதுவரையில் இந்த சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. அண்மையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போதும், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடாத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
பிரபல இந்திய பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்கான நேர ஒதுக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் அமைச்சர் பீரிஸ் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அதேவேளை, எதிர்வரும் 28ம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறும் பின்னணியில் அமைச்சர் பீரிஸ் இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.