வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அவர் கடமையேற்பதற்கு முன்னர், இலங்கை வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பில் 34 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட அலுவலகம், மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிலிப்பைஸ் நாட்டின் இலங்கை தூதரகம் ஆகியவற்றிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஒஸ்ட்ரியாவிற்கான இலங்கை தூதுவராகவும் வியன்னாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாகவும் அருணி விஜேவர்தன கடமையாற்றியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பட்டத்தை பெற்றுக்கொண்ட இவர், அங்கு பிரிட்டிஷ் செவனிங் அறிஞராகத் திகழ்ந்தததுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும், மேற்கு அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியை அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இராஜினாமா செய்த உடனேயே புதிய செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.