காலி மக்குலுவ பகுதியில் கார் ஒன்று புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் காரில் பயணித்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துகுள்ளான காரில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் திருமண வைபவம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எச்சரிக்கை சமிக்ஜை வழங்கப்பட்ட போதிலும் கார் ரயில் கடவைக்குள் நுழைந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிந்திய தகவல்
விபத்தில் சிக்கிய கர்ப்பிணி தாயாரும் மகளும் பலி
காலி-மக்குலுவ பகுதியில் புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (18) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.