கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சில நபர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது அருகாமையில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக சஸ்கட்ச்வானின் துணை பொலிஸ் ஆணையாளர் ரொஹொன்டா பிளக்மொர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் பெரும் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பதற்ற நிலை உருவாகியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியின மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜேம்ஸ் ஸ்மித் மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகளில் தாக்குதல் இடம்பெற்றதாகவும், 13 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்து கொண்டதும் அது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
31 வயதான டேமியன் சன்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சன்டர்சன் ஆகியோரே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இருவரையும் உடனடியாக பொலிஸாரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இருவரும் ஆயுதம் தாங்கியுள்ளதாகவும் இவர்கள் ஆபத்தானவர்கள் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து ஜேம்ஸ் க்ரீ நேசனில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சஸ்கட்ச்வான் முதல்வர் ஸ்கொட் மோய் தனது ஆழ்ந்த இரங்கல்களையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.
கத்தி குத்து தாக்குதல் நடாத்தியமைக்கான சரியான காரணங்கள் வெளியிடப்படவில்லை என்பதுடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.