ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற நிலையில், நாட்டின் வடக்கில் தமிழர்களின் காணியை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்வதாகவும், மலையகத் தமிழர்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் காணி உரிமைப்பற்றி உரையாற்றுகையில், மன்னார் மாவட்டத்தில் மக்களின் விவசாய காணிகளை அபகரிக்கும் முயற்சியில் வனவளத் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி பேசியிருந்தார். 2 மில்லியன் மக்களுக்குக் காணி உரிமை வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மக்களின் விவசாய காணிகள்
மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரர் கிராமத்தில் உள்ள மக்களின் சொந்த காணிகளை, வனவளத் திணைக்களம் தமக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டுக் கொண்டு அடையாளப்படுத்தல் தூண்களை நாட்ட முயல்கிறது.
மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி பெருமையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது மன்னார் மாவட்டத்தில் மக்களின் விவசாய காணிகள் அரச திணைக்களத்தால் அபகரிக்க முயற்சி செய்யப்படுகின்றது
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து காணி அபகரிப்பு முயற்சியைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை கடந்த 7ஆம் திகதி ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் நேற்று (08) உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
சபை ஒத்திவைப்புவேளை விவாதம்
காணி விடுவிப்பு விவகாரத்தில் ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டிலும், அரச அதிகாரிகள் ஒரு நிலைப்பாட்டிலும் செயற்படுவதகாவும், இவ்வாறன செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தாமல் இருப்பது கேள்விக்குரியது எனவும் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, நேற்றையதினம் (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்பினை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார்.
“பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதை எதிர்க்கின்றோம் என பெருந்தோட்ட நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
காணி உரிமை வழங்கினால் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள் எனவும் கூறின. இப்படியான தரப்புகளை வைத்துக்கொண்டு நாட்டை எப்படி முன்னேற்றுவது?” காணி உரிமை சம்பந்தமாக பிரதமர் செயலகத்தில் நேற்று (09) சந்திப்பொன்று நடைபெற்றதாகவும், இதன்போதே பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் பங்கேற்ற தரப்பினர் இந்த கருத்தை முன்வைத்ததாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது நாடாளுமன்ற உரையில் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்டப்பகுதிகளில் 40 ஆயிரம் ஹெக்டேயர் தரிசு நிலங்களாக காணப்படுவதாகவும், பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு அதில் 10 வீதத்தை வழங்கினாலே போதுமானது எனவும் தான் இந்த கூட்டத்தில் சுட்டிக்காடட்டியாதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். “இங்கு காணி உரிமை பிரதான இடத்தைப் பெறுகிறது.
1897 தரிசு நிலச் சட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை காலனித்துவப் பிரித்தானிய அரசு பெற்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும், பறிக்கப்பட்ட காணி உரிமைகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்த காணி உரிமையை மீள வழங்கும் பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக எமது சமூகத்தில் இணைக்கின்றோம்.”