அரசியல் அமைப்பினை மீறி பழைய பாராளுமன்றத்தை கூட்ட எந்த தீர்மானமும் எமக்கு இல்லை, பாராளுமன்றம் கூட்டாது போனாலும் நிதி அதிகாரத்தை கையாள முடியும் என கூறும் அமைச்சர் பந்துல குணவர்தன அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டினை கொண்டு நடத்த ஜனாதிபதிக்கு எந்த விருப்பமும் இல்லை என்றார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
அரசியல் அமைப்பினை மீறி எம்மால் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது, கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
அவசரகால சட்டம் இருக்கும் நேரங்களில் பாராளுமன்றத்தை கூட்ட முடியும். ஆனால் நாட்டினை அவசரகால சட்டத்தின் கீழ் கொண்டு நடத்த ஜனாதிபதிக்கு எந்த தேவையும் இல்லை. அவர் அதற்கு விரும்பவும் இல்லை.
உலக நாடுகளில் பல இலட்சம் மக்கள் இறந்த நேரத்திலும் ஒற்றை இலக்கத்தில் மரண எண்ணிக்கையை கட்டுப்படுத்தி நாட்டினை மீட்டெடுக்கும் ஆட்சியை நாம் செய்து காட்டியுள்ளோம்.
இவ்வாறு எந்த வேலைத்திட்டங்களையும் முன்னைய ஆட்சியாளர்கள் செய்யவில்லை. பாராளுமன்றம் நடைமுறையில் இருந்த காலத்தில் குறித்த தினத்தில், குறித்த நபர்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்படுவதாக முழுத் தகவல்களும் கிடைத்தும் அதனை தடுக்கவோ குறைந்த பட்சம் வானத்தை பார்த்து துவக்குகளை சுடக்கூட பயன்படுத்த தெரியாத அரசாங்கமே இருந்தது. ஆகவே இப்போது எம்மை விமர்சிக்க வேண்டாம் என்றார்.