234 பேருடன் மாயமான மலேசிய விமானம் தொடர்பில் புதிய ஆதாரம் கிடைத்துள்ளதால் தேடும் பணியை தொடர போவதாக நிபுணர் Peter Foley தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்த எம்எச்370 விமானம், புறப்பட்ட ஒன்றரை மணிநேரத்திற்குள் தென்சீன கடல் வான்வெளியில் திடீரென மாயமானது.
பல ஆண்டுகள் தேடியும் விமானம் கிடைக்காததால் அதில் பயணித்த 239 பேரும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
விமானம் மாயமாகி 7 ஆண்டுகள் ஆகியும், அந்த விமானத்திற்கு என்ன ஆனது? என்பதை இன்று வரை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், கடல்சார்வியலாளர்கள் மற்றும் விமான நிபுணர்களால் அடையாளம் காணப்பட்ட ஒரு புதிய தேடல் பகுதியில் காணாமல் போன விமானத்திற்கான புதிய தேடுதல் பணி தொடங்கப்பட வேண்டும் என்று Peter Foley கூறினார்.
பெரிய அளவிலான பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி நடக்கவில்லை, புதிய விசாரணையின் கீழ் விமானம் விழுந்ததாக நம்பப்படும் கடலில் பகுதியின் இருபுறமும் 70 கடல் மைல் ஆராயப்பட வேண்டும் என கூறினார்.
ocean drift மற்றும் விமான பாதை பகுப்பாய்வு தரவுகளின்படி, காணாமல் போன விமானம் மேற்கு அவுஸ்திரேலியாவின் கேப் Leeuwin-க்கு மேற்கே 1,200 மைல் தொலைவில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் கேப் Leeuwin, ஆழமான கடல் தரை பள்ளத்தாக்குகளுக்கும் நீருக்கடியில் உள்ள மலைகளுக்கும் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்டில் கண்டுபிடிக்கப்பட்ட போயிங் 777 பாகங்களின் பகுப்பாய்வு முடிந்ததும் விமானத்திற்கான புதிய தேடலுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன விமானத்தின் பாகங்கள் மொரீஷியஸ், மடகாஸ்கர், தான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது நினைவுக் கூரத்தக்கது.