பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பூரி சுடுவதில்லை. காரணம் எண்ணெய் உணவுகளை தவிர்க்கின்றனர். எண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இருந்தாலும், நமது வீடுகளில் செய்யப்படும் பூரியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால் எண்ணெய் அதிகம் என்பதால் இப்போதெல்லாம் வீடுகளில் அடிக்கடி பூரி செய்வதில்லை.
இப்பதிவில், எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் பூரி செய்வது என்பதை பற்றிபார்ப்போம்..
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு ஒரு கப்
காய்கறிச் சாறு அல்லது கீரைச் சாறு அல்லது மூலிகை சாறு 50 மி.லி
இந்துப்பு அல்லது எலுமிச்சை சாறு அல்லது நெல்லிப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்று தேவையான அளவு
தேங்காய் பால் அரை மூடி தேங்காய் துருவலிருந்து பாலை எடுத்துக் கொள்ளவும்.
நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, தேன், உலர் பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்று 100 கிராம்.
செய்முறை
பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீர் அல்லது எண்ணெய் சேர்க்காமல் காய்கறிச் சாறு அல்லது கீரைச்சாறு சேர்த்து பிசையவும். இதனுடன், தேங்காய் பால் சேர்த்து நன்கு பிசையவும்.
பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது நெல்லிப் பொடி அல்லது இந்துப்பை சேர்க்க வேண்டும்.
அதன்பின்னர் மாவை சப்பாத்திக் கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளவும் ஒரு அகன்ற வாயுடைய பாத்திரத்தில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
தேய்த்து வைத்துள்ள பூரி மாவை ஒரு ஜல்லிக் கரண்டியில் வைத்து கொதிக்கின்ற நீரில் அப்படியே இரண்டு நிமிடம் கரண்டியுடன் வைக்க வேண்டும்.
பூரி பதமாக வந்தவுடன் கரண்டியுடன் வெளியே எடுத்து விட வேண்டும். அருமையான எண்ணெய் இல்லாத பூரி ரெடி.
இந்த பூரிக்கு நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, தேன், உலர் பழங்கள் ஏதேனும் ஒன்றை சேர்த்து சாப்பிடலாம். இனிப்பை தவிர்க்க நினைப்பவர்கள் சட்னி அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.