தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தேஷார ஜயசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்குத் தேவையான பணிகள் நடைபெற்று வருவதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் அமைச்சுக்களின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திறமையற்ற மற்றும் சர்ச்சைக்குரிய அமைச்சுக்களின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளை நீக்குவதற்கும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமை தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக சபை மீது பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
இந்நிலையிலேயே, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
தற்போது வரையில் நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.