அண்மையில் மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் இலங்கையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.
நிலைமைகளின் கட்டங்களை அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மிரிஹான, பென்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு செல்லும் வீதியை 2020 மார்ச் 31 ஆம் திகதி இரவு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து கலவர தடுப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர்,
தடுப்புகள் மற்றும் தண்ணீர் கலவர தடுப்பு பிரிவுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு இலங்கை இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் மட்டுமே அவர்களைக் கைது செய்ய முடியும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் காவலில் இருக்கும் போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்களா என்பதை கண்காணிக்கும் நோக்கத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அதிகாரிகள் குழுவொன்று மிரிஹான காவல்துறைக்கு கண்காணிப்பு பயணம் ஒன்றையும் மேற்கொண்டது.