ருமேனியாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்த நிலையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுச் இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாளிகாவத்தை – லக்விரு செவன வீடமைப்புத் தொகுதியில் மறைந்திருந்த பெண் ஒருவர் அண்மையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்று தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இருப்பினும், அனுமதிக்கப்படாத பணியிடங்களுக்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
குறித்த சந்தேக நபரிடம் பணம் கொடுத்து வேலை கிடைக்காத 88 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வருமாறு விசாரணை அதிகாரிகள் கூறிய போதும், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகாமல் சந்தேகநபர் தலைமறைவாக இருந்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.