தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்யக்கோரிய வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை தமன்னா உட்பட பலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் உயிர் பலிகள் அதிகரித்து வருவதால் இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் முகமது ரஸ்பி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் இதுதொடர்பில் பதிலளிக்குமாறு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் விளைாயட்டிற்கு தடை விதிப்பது தொடர்பாக 10 நாட்கள் அவகாசம் தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.